ஒரு தத்துவத்தை பயில வேண்டும். அந்த தத்துவத்தை நம்ப வேண்டும். பேச்சு, செயல், எண்ணம், சிந்தனை, உணர்வுகள், பிரஹ்னை நீங்கள் நம்புகிற தத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். நீங்கள் நம்புகிற தத்துவத்தை பிரதிபலிக்க வேண்டும்.
நீங்கள் நம்புகிற தத்துவத்தின் படி நீங்கள் வாழும்போது அந்த தத்துவத்தின் தரிசனத்தை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். அந்த தரிசனத்தில் நிலை பெற்று விடுவீர்கள். அந்த தரிசனத்திலே வாழ்ந்து விடுவீர்கள்.
தத்துவத்தின் பயன் அவ்வளவே. வேறு எந்த உலகாய்த பயனோ நோக்கமோ லாபமோ தத்துவத்துக்கு இல்லை.
தத்துவம் உங்கள் வாழ்க்கையை கோருகிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்பணித்தால், தத்துவம் அதன் தரிசனத்தை உங்களுக்கு உணர்த்தும். அவ்வளவுதான்.
தரிசனத்தால் என்ன பயன்? தரிசனம் உங்களுக்கு செல்வம், ஆரோக்கியம், புகழ், மகிழ்ச்சி, இன்பம் தருமா? தரிசனம் இவை எதையும் தராது.
தரிசனம் உங்களை உயிர், இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றுடன் இணைந்துவிடும். தரிசனத்தின் பயன் உங்களை உங்களின் மூலத்தில் ஒன்றாக்கிவிடும். அவ்வளவே.
எந்த தத்துவமாய் இருந்தாலும், எந்த தரிசனமாய் இருந்தாலும் அவைகளின் முடிவு மூலத்தில் ஒன்றாவதுவே.
மூலத்தில் ஒன்றிணைவதால் என்ன பயன?
அது ஒரு நிலை அல்லது அனுபவம். உங்களின் மனப்பிறழ்வுகள், விழுமியங்கள் (delusions, values) அனைத்தும் அழிந்து போன பின் எஞ்சியிருப்பது எதுவோ அதை உணரும் நிலை.
மூலத்தில் ஒன்றாவதால், உலகியல் வாழ்வில் எந்த பயனும் இல்லை.
உலகியல் அளவீடுகள் ஆனா செல்வம் வறுமை நோய் இன்பம் துன்பம் ஆகியவை விதிப்படியே அல்லது கர்ம வினைப்படியோ அல்லது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய அல்லது தொடர்பற்ற இயக்கங்களினால் உங்கள் வாழ்வில் நிகழும். உங்கள் அகங்காரம் அவைகளை நீங்கள் நிகழ்த்தியதாக உங்களை நம்ப வைக்கும். இந்த நம்பிக்கை உங்களை மூலத்தில் இருந்து விலக வைக்கும்.